×

பஞ்சாபில் இன்று அமர்க்களம் 80 போர் விமானம், ஹெலிகாப்டர்கள் சாகசம்

சண்டிகர்: பஞ்சாப்பில் இன்று 90வது விமானப்படை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்திய விமானப்படை உருவாக்கப்பட்ட அக்டோபர் 8ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விமான படையின் பலத்தை பறைசாற்றும் வகையில் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும், அணிவகுப்புகளும் நடத்தப்படும். இந்நிலையில், 90வது விமானப்படை தினம் பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் உள்ள சுக்னா ஏரி தளத்தில் இன்று கொண்டாடப்படுகிறது. இதில், 80 ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்கின்றன. இவை, திகைப்பூட்டும் பல சாகசங்களை செய்து காட்ட உள்ளன.  

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை  தளபதி சவுதாரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். அப்போது, விமான படை வீரர்களுக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டரான எல்சிஎச் பிரசாந்த், துருவ், சினுக், அப்பாச்சி மற்றும் எம்ஐ-17 வகை ஹெலிகாப்டர்களும், தேஜஸ், சுகோய், மிக்-29, ஜாகுவார், ரபேல், ஐஎல்-76, சி-130ஜே மற்றும் ஹாக் ஆகிய போர் விமானங்களும் வானில் பறந்து சாகசம் புரிய உள்ளன.


Tags : Punjab , Amarkalam 80 fighter jets, helicopters adventure in Punjab today
× RELATED பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28...